தமிழர்களின் வாழ்வியலில் பொங்கல் திருவிழாவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுமோ அதற்கு சற்றும் குறையாமல் கோலாகலமாக கொண்டாடப்படும் மற்றொரு விழா ஆடிப்பெருக்கு. ஆதி காலத்தில், காளை பூட்டி கலப்பை மண் தொடும் முன்னரே தமிழர்களின் கலாச்சாரத் திருவிழாவாக மாறியது ஆடிப்பெருக்கு. சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கூட ‘புதுப்புனல்’ என்ற பெயரில் ஆடிப்பெருக்கு விழா பற்றிய குறிப்புகளும் உள்ளன.
அப்படிப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவானது ஜூலை 3ஆம் தேதியான நேற்று காவிரி பாயும் மாவட்டங்களில் ‛பொன்னி நதி பார்க்கணுமே…’ என கோலாகலமாக நிறைவுற்ற நிலையில், அதற்கு மறுநாளான இன்று (ஆகஸ்ட் 4) காசி முதல் ராமேஸ்வரம் வரை பயபக்தியோடு கொண்டாடப்படுகிறது ஆடி அமாவாசை திதி.
தங்களுக்கு வழிகாட்டி மறைந்த முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், அவர்களது ஆன்மாவை திருப்திப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது பலராலும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சூழல்கள் காரணமாக அந்த நாட்களில் மூதாதையர் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆடி அமாவாசையான இன்று அவர்களுக்கு திதி கொடுத்தால் 6 மாதம் திதி கொடுத்த பலன் கிடைக்கும் என்பதால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் இந்த ஆடி அமாவாசையானது மிக சிறப்பான தினமாக பார்க்கப்படுகிறது.
தவிர, மாதந்தோறும் வரும் அமாவாசையில் கொடுக்கும் தர்ப்பணமானது எமதர்மராஜா கையில் சென்று அதன் பிறகுதான் முன்னோர்கள் கையில் சேர்வதாகவும், ஆனால், இந்த ஆடி அமாவாசையில் செய்யக் கூடிய தர்ப்பணத்தின் போது முன்னோர்களே நேரடியாக வீட்டிற்கு வருவதாகவும் ஐதீகம் இருப்பதால், ‘அந்த தர்ப்பணத்தை தாங்களே நேரடியாக செய்யும் முறை தெரிந்தால் சிறப்பாக இருக்குமே?’ என்பதே அன்றைய தினத்தில் பலரின் ஆசையாகவும் இருக்கும். அதற்கான வழி முறைகளை இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு வழிகாட்டி அவர்களையே தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய வைத்திருக்கிறது நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ‘சித்தர்கள் கோட்டம்’ என்ற தன்னார்வ ஆன்மீக அமைப்பு.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை சூரிய உதயம் இன்று காலை 6.08 மணிக்கு கன்னியாகுமரியிலும், சென்னையில் 4 நிமிடங்கள் தாமதமாக 6.14க்கும் துவங்கிய நிலையில், ஏற்கனவே ‘சித்தர்கள் கோட்டம்’ செய்து வைத்த ஏற்பாட்டின் படி காலை சரியாக 6.20 மணிக்கு ஆன்லைன் மூலம் திதி செய்யும் வழிமுறைகளை ‘லைவ்’ வீடியோ மூலம் பொதுமக்களுக்கு வழிகாட்டினார் தஞ்சையைச் சேர்ந்த ஆன்மீக பயிற்சியாளரான ஹரிஹர சுதன்.
“எப்படீங்க சாமி வந்துச்சு இந்த ஐடியா..?” என ஆன்மீக பயிற்சியாளர் ஹரிஹர சுதனை அதே கூகுள் மீட்டில் தொடர்பு கொண்டு பேசினோம். “இது திடீர்னு வந்த யோசனையெல்லம் இல்லீங்க. ‘தமிழ் மரபு வழி வாழ்வியல் சடங்கு’ என்ற 1 வருட ஆன்மீக டிப்ளமோ கல்வியை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ‘சித்தர்கள் கோட்டம் அகாடமி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ நடத்திக்கிட்டு வராங்க. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்தப்படும் இதில் பெயர்சூட்டு விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா, திருமணம், வளைகாப்பு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வின் போதும் செய்யப்படும் அர்ச்சனைகளை தமிழில் செய்வது குறித்து தரப்படும்.
அதில் இதுவரை 3 பேட்ச் மாணவர்கள் பட்டம் பெற்று சென்றுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற போதுதான், “முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தை அவர் அவரையே நேரில் செய்ய வைத்தால் சிறப்பாக இருக்குமே?” எனவும், இது குறித்து பலரும் தங்களிடம் கேட்டு வருவதாகவும் சித்தர்கள் கோட்டம் நிர்வாகிகள் விருப்பப்பட்டார்கள்.
காரணம், மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் அமாவாசையன்று மூதாதையர்களுக்கு திதி கொடுக்க ஆற்றங்கரைக்கு பலர் வந்தாலும், அதனை செய்து முடிக்க வெகு சிலர் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் கொண்டு வரும் பூஜைப்பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து, மொத்தமாக மந்திரம் சொல்லி, கடைசியில் திதி முடிந்து விட்டதாக ‘ஸ்வாகா’ சொல்வதில் பலருக்கும் திருப்தி இருப்பதில்லை. எனவேதான், எளிய தமிழில் அனைவருக்குமே புரியும் வகையில் இதை செயல்படுத்துவது என முடிவெடுத்து ஈசனின் அருளால் இன்று அது நிறைவேறி இருக்கிறது. தங்கள் கைகளால் தங்கள் தாத்தா, பாட்டிமார்களுக்கு திதி செய்ததில் இதில் கலந்து கோண்ட அனைவருக்குமே பரம திருப்தி. இந்த ஆடி அமாவாசையில் துவங்கிய இந்த நேரடி தர்ப்பன வழிகாட்டி பயிற்சியானது இனி இது ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையிலும் தொடரும்” என்றவரை மடக்கி,
“சரி, மத்தவங்க மூலம் தர்ப்பணம் செய்யிறதுக்கும் இதுக்கும் என்னதாங்க வித்தியாசம்?” எனக்கேட்டோம். “உங்களைப் பெற்ற தாய் தந்தையர்களுக்கும், பாசம் காட்டிய தாத்தா பாட்டிகளுக்கும் உங்கள் கையால் உணவு ஊட்டுவதற்கும், எவரையோ விட்டு சாப்பாடு போடச் சொலதற்கும் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசந்தாங்க இதுக்கும்” என பட்டென பதிலளித்து வணக்கம் கூறி ‘ஆஃப் லைனுக்கு’ சென்று விட்டார் ஆன்மீக பயிற்சியாளர் ஹரிஹர சுதன்.
இவர், சித்தர்கள் கோட்டம் அகாடமி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ‘ தமிழ் மரபுவழி வாழ்வியல் சடங்குகள்’ என்ற ஓராண்டு டிப்ளமோ பயிற்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு முடித்து பட்டம் பெற்ற முன்னால் மாணவர் என்பது கூடுதல் தகவல்.
செய்தி : பாரதி வேந்தன்