ஆடு மேய்ப்பது முதல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த நிலவையும் தாண்டி செல்வது வரை அனைத்து செயல்பாடுகளுக்கும், பணப் பரிவர்த்தனைகளுக்கும் இன்டெர்நெட் என்ற இணையதள வசதி இன்றியமையாததாக ஆகிவிட்டது. எனவே, அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் குடிகொண்டுள்ள நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம் சாமானிய மனிதர்களுக்கும், ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பெரிய சிரமமாக உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில்தான், “அனைவருக்கும் இலவச இணைய வசதி வழங்க வேண்டும். முக்கியமாக பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதி மக்களுக்கு பிற இடங்களைப் போல இணையத்தை பயன்படுத்தும் வசதி கிடைக்க வேண்டும்” என்ற தனிநபா் மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முன்வைத்தார் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர். வி.சிவதாசன்.
அதில், ‘இணைய வசதியைப் பயன்படுத்துவதற்கு நாட்டு மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. முக்கிய நகரங்களில் மட்டுமல்லாது பின்தங்கிய பிராந்தியங்கள், தொலைதூர பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இலவச இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் அனைத்து மக்களுக்கும் விலையில்லாமல் இணைய வசதி கிடைப்பது உரிமையாக்கப்பட வேண்டும். இந்த வசதியை மத்திய அரசு நேரடியாக மக்களுக்கு செய்து தர வேண்டும். அல்லது ஏற்கெனவே இந்த சேவையை அளித்து வரும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து மக்களுக்கு கட்டணமில்லாத இணைய சேவையை வழங்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்த அந்த மசோதா இந்த கூட்ட்த்தொடரில் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி அரசியல் கட்சிகள் முதல் பலரிடமும் எழுந்திருந்த நிலையில்தான்,
‘இணைய வசதியை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும்’ என்ற டாக்டர்.வி.சிவதாசனின் தனிநபா் மசோதாவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட்தாகவும்’ இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளரிடம் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.