ஆண்டுதோறும் பசுமையாக இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வனங்களில் பொழியும் மழையில் பிறந்து, வற்றாத தாமிரபரணி ஆறாக மாறி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் சுமார் 120 அடி உயரத்தில் இருந்து கொட்டும் அகத்தியர் அருவியில் குளிப்பதால் சகல பாவங்களும் கழுவப்படும் என்பது நம்பிக்கை. ஆனால், இயற்கை வழங்கிய அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை எப்போது வசூல் செய்ய ஆரம்பித்ததோ, அப்போதிருந்து அப்பகுதியின் ஆதிவாசி காணி இன மக்கள் முதல், அனைத்து தரப்பு மக்களிடமும் வனத்துறைக்கு எதிரான கொந்தளிப்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது.
தவிர, அந்த அருவி கொட்டும் ஆன்மீக தளமான பொதிகை மலை, அந்த மலையில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் போன்றவற்றிற்கு செல்லவும், வழிபடவும் வனத்துறை விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகளாலும், வனப் பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சிறப்பு பேருந்து நிறுத்தப்பட்டதாலும் தங்களில் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்படுவதாக குமுறுகின்றனர் அம்பாசமுத்திரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பொதுமக்கள்.
தாமிரபரணியை தாயாகவும், அது பிறந்த மலையை தாய் மண்ணாகவும் மதிக்கும் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மத, இன, அரசியல் வேறுபாடு எதுமின்றி இது தொடர்பாக மாதந்தோறும் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேறாத காரணத்தால் மீண்டும் இம்மாதம் 19ஆம் தேதி (16.072024) வெள்ளிக் கிழமையன்று விக்கிரமசிங்கபுரம் தேரடித்திடலில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர்.
கடந்த மாதமும் அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தலைமையில் அகத்தியர் அருவி உரிமை மீட்பு குழுவினர் இதே தேரடி திடலில் கண்டன பொதுகூட்டத்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி, மாதம் ஒரு ஆர்ப்பாட்டம், வாரம் ஒரு போராட்டம் என தொடர்ந்து வரும் நிலையில், ‘அவர்களின் கோரிக்கைகள்தான் என்ன?’ என்பதை அறிய அகத்தியர் அருவி உரிமை மீட்பு குழுவினர் சிலரிடம் இது குறித்துப் பேசினோம்.
“தமிழகத்தில் பல்வேறு அருவிகள் இருந்தாலும், இந்த பொதிகை மலையில் உருவாகும் அகஸ்தியர் அருவிக்கு உள்ள தனிச்சிறப்பே மனிதர்களின் காலடித்தடங்கள் படாத காடு வழி பயணிப்பது மட்டுமல்லாமல், இதில் குளிப்பதால் சகல பாவகளும் தோசங்களும் நிவர்த்தியாகும் என்பது இந்து மதநம்பிக்கை. அப்படிப்பட்ட ஆன்மீக பெருமை வாய்ந்த பாபநாசம் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது எந்தவிதத்தில் சரியாகும்? இவர்கள் கட்டணம் விதிப்பது என்பதே நாங்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த எங்கள் உரிமையின் மீது கை வைத்து அதை பறிப்பது போலாகும். அதைத்தான் தற்போது செய்து வருகிறது வனத்துறை.
தவிர, இப்பகுதியில் காடுவாழ் ஆதிகுடிகளான காணி இன மக்களின் வாழ்வாதாரத்தையும் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து பறித்து வரும் வனத்துறையினர், இந்துமத புராணங்களில் ராஜரிஷியாக கருதப்படும் அகத்திய முனிவர் தவம் செய்த பொதிகை மலைக்கு செல்லும் உரிமையையும், வனப்பாதைகளை பயன்படுத்தும் உரிமைகளையும் கிட்டத்தட்ட பறித்தே விட்டனர். கேட்டால், ஆறு, வனம், சீர்கேடு என ஏதேதோ காரணங்களைக் கூறி வருகிறது வனத்துறை. ஆனால், தாமிரபரணி சீர்கேடு அடைவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை. ஆற்றில் குவியும் குப்பை கூளங்களை அகற்றும் பணியைக் கூட இங்குள்ள அனைத்து தரப்பு பொதுமக்களின் உதவியோடும் தன்னார்வல அமைப்பான சித்தர்கள் கோட்டம் செய்து வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த பொருனை நதி திருவிழாவின் போது இப்பகுதி ஆதிகுடிகளான காணி இன மக்கள் இயற்கையை சீரழிக்காமல் வாழ்ந்து வரும் இயன்முறை வாழ்வு குறித்து பெருமையான குறும்படம் ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. ஆனால், அந்த ஆதிகுடிகளின் உரிமையோடு சேர்த்து அப்பகுதி மக்கள் அனைவரின் உரிமையையும் பறித்து வருகிறது வனத்துறை.
எனவே, எங்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கும் வனத்துறையை கண்டித்தும், எங்களின் உரிமை மீட்பு போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் கீழ்க்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (19.07.2024) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாபநாசம் அருகிலுள்ள விக்கிரசிங்கபுரம் தேரடித்திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். அரசு அதற்கும் செவி சாய்க்காத பட்சத்தில் சென்னையில் உள்ள கோட்டை எதிரில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும்” என்றனர் அவர்கள்.
கோரிக்கைகள்
1. பாபநாசம் வனசோதனை சாவடியில் வசூலிக்கப்படும் அகத்தியர் அருவிக்கு செல்லும் நுழைவு கட்டணத்தை நிறுத்த வேண்டும்
2. அம்பாசமுத்திரம் முதல் அகத்தியர் அருவி வரை தினசரி பஸ் போக்குவரத்து இயக்கப்பட வேண்டும். அத்துடன், ஆட்டோ போக்குவரத்து இயங்குவதற்கு உரிமை வேண்டும்.
3 . பொதிகை அகத்தியர் மலைக்கு செல்லும் யாத்திரிக உரிமை வேண்டும். அத்துடன், பாணத் தீர்த்தம் சென்று புனித நீராடி தீர்த்தவாரி எடுத்து வரும் உரிமை வேண்டும். சோலார் படகு இயக்கப்பட வேண்டும். அந்த உரிமையை காணி இன மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
4. காணி குடியிருப்பு மக்களுக்கு உரிய செம்பு பட்டயத்தில் உள்ள பகுதியை வனத்துறை அவர்களிடம் வழங்க வேண்டும்.
5. சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது கால்நாட்டு நிகழ்வு முதல் 8ஆம் பூஜை வரை 16 நாட்கள் தங்கி வழிபாடு நடத்தும் எங்களின் அடிப்படை உரிமை வேண்டும்.
6. ஜமீன் சிங்கம்பட்டியில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவில் வரை உள்ள ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட காட்டு வழி பாதை வழியாக செல்லும் மலையாள வல்லயம் மற்றும் சங்கிலி பூதத்தாருக்கு உரிய சங்கிலியும் அந்தப் பாதையில் கொண்டு செல்லும் எங்கள் உரிமை வேண்டும்,
7. பொதிகை மலையில் அமைந்துள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் எந்தவித தங்கு தடையும் இன்றி செல்ல எங்கள் அடிப்படை உரிமை வேண்டும். காலம் காலமாக அங்கு குடியிருந்து வருபவர்களின் குடியிருப்புகள் சிதிலம் அடைந்தால் அதை சீரமைக்க எந்தவித கட்டுப்பாடும் இன்றி புணரமைக்க கூடிய எங்கள் உரிமை வேண்டும்.
8. ஆண்டாண்டு காலமாக லோயர் கேம்ப் வனப் பேச்சியம்மன் கோவில் கொடை விழாவிற்கு 24 மணி நேரமும் சென்று கொண்டிருந்த சிறப்பு பேருந்தை நிறுத்தியதை மீண்டும் இயக்க செய்ய வேண்டும்.
9. பாபநாசம் தலையணை பகுதியில் இருந்து அகத்தியர் அருவி கல்யாண தீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் கோவில் வரை பொதுமக்கள் நடந்து செல்வதற்கான ஆறடி பொதுபாதையில் மீண்டும் மக்கள் நடந்து செல்லும் எங்கள் உரிமை வேண்டும் மேலும் , மற்றும் காலை 6.00 மணிக்கு மேல் மாலை 6.00 மணிக்குள் சுத்தமான மூலிகை காற்றை சுவாசித்து உடல் பயிற்சி செய்யும் எங்கள் உரிமை வேண்டும்,
10. கல்யாண தீர்த்தம் கோடி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டாண்டு காலமாக நிலவு வந்த பிறகு நடத்திய வந்த பௌர்ணமி பூஜையை எந்தவித தங்கு தடை இன்றி நடத்திடும் எங்கள் அடிப்படை உரிமை வேண்டும்,
11. பாபநாசம் தலையணை பகுதியில் உள்ள தடுப்பு கதவை அகற்றி உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பலகைகளையும் வைத்து தலையணைப் பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
12. பாபநாசம் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைத்துள்ள இரும்பு கதவினை அகற்றி மீண்டும் அதற்கான எவ்வித முயற்சிகளையும் அனுமதிக்க கூடாது.
13. ஆக்கிரமிப்பு என்று கூறி பாபநாசம் கோவிலை சுற்றி வாழ்வாதாரம் ஈட்டி வந்த அடித்தட்டு வியாபாரிகளை அப்புறப்படுத்தியதை கண்டிப்பதோடு , அந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
14. பாபநாசம் கோவில் குத்தகைதாரர்கள் என்று கோவிலை சுற்றி கோவில் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருப்பவர்களை அகற்றி மாற்று வியாபார வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
15. சேர்வலார், காரையார் அணைகளை பார்வையிட பல ஆண்டுகாலமாக உள்ள எங்கள் உரிமைகள் வேண்டும்.
செய்தி: பாரதி வேந்தன்