கடந்த 5 ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரில் தனது வீட்டு வாசலிலேயே ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவரான ஆம்ஸ்ட்ராங். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வந்தனர் செம்பியம் காவல்துறையினர். அப்போது, ரவுடி திருவேங்கடம் மாதவரம் ரெட்டேரி பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக காவலுறையிடம் தெரிவித்தை அடுத்து அந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ரவுடி திருவேங்கடத்தை அழைத்துச் செல்லும்போது போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் திருவேங்கடம்.
அதன் பின்னர் நடந்த தொடர் விசாரணையில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி, மற்றொரு வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த மூவரையும் கைது செய்தனர் காவல்துறையினர்.
அதன் தொடர்ச்சியாக போலீசாரின் புலன் விசாரணையில், ஆற்காடு சுரேஷின் தோழியும், பெண் தாதாவுமான புளியந்தோப்பு அஞ்சலை சம்பந்தப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த அஞ்சலையை கைது செய்த தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் தங்குமிடமும் ஏற்பாடு செய்ததாக அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அஞ்சலை வங்கி கணக்குகளின் விவரங்களை எடுத்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலைச்சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் முதல் திரைத்துறையினர் வரை ஆர்ப்பாடம், போஆட்டம் என தமிழகமே பரபரப்பாக இருக்கும் நிலையில்தான் உச்சகட்ட பரபரப்பு தகவலை கூறி ஒட்டுமொத்த காவல்துறையையும் எச்சரித்துள்ளது உளவுப்பிரிவு.
அதாவது, ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதர்ரும் காவல்துறையால் A+ குற்றவாளி என கருதப்படுபவருமான ‘பாம்’ சரவணன் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பலி வாங்கலாம் என காவல்துறையினர் மட்டுமல்லாது பொதுமக்களின் பிளட் பிரஸ்ஸரயும் எகிறச்செய்துள்ளது.
‘பாம்’ சரவணனின் பின்னணி என்ன?
வெடிகுண்டு வீச்சு, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவராக கூறப்படும் சரவணன், கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது வெடிகுண்டு வீசுவதில் கை தேர்ந்தவர் என்பதால் ‘பாம்’ சரவணன் என்று ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு காவல்துறையிலும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், பின்னர் ஜாமீனில் வெளிவந்து நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
ஏற்கனவே கொலையான தென்னரசு மற்றும் பாம் சரவணனின் இன்னொரு சகோதர் மாரி. இவர், கொலையான ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது அதை உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாரியை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரி திடீரென உயிரிழந்தார்.
ஏற்கனவே ஆற்காடு சுரேஷ் கொலையில் பாம் சரவணன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க, ஆற்காடு சுரேஷ் தரப்பினரை மொத்தமாக காலி செய்ய பாம் சரவணன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக சந்தேகிக்கிறது உளவுத்துறை.
ஆக மொத்தத்தில், கிரைம் சினிமாவையும் மிஞ்சும் இந்த ரவுடிகள் ராஜ்யத்தால் பதபதைப்பின் பிடியில் இருக்கிறது தமிழகம்.