தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராக நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் யுவராஜா. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த யுவராஜா, ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். காங்கிரஸ் சார்பில் 2011 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய நிலையில், யுவராஜாவும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தமாகாவிலேயே தொடர்ந்து பயணித்தார் யுவராஜ். இருந்தாலும், தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து வரும் தாமக தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சமியின் வீட்டுக்கே குடும்பத்தோடு நேரில் சென்று அவரை சந்தித்து விட்டு வந்தார் யுவராஜ். இது, பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், “கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமாகா அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்” என்று நீண்ட விளக்கம் அளித்தார் தாமக இளைஞரணித் தலைவரான யுவராஜ்.
ஆனாலும், ‘அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டுப் போகலாம்’ என தாமகவைச் சேர்ந்த பலரும் யூகித்திருந்த நிலையில்தான் திடீரென இன்று தனது தாமாகவில் தான் வகித்து வந்த மாநில இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் யுவராஜ். இது தொடர்பாக தாமக தலைவர் ஜி.கே. வாசனிடன் தனது ராஜினாமா கடித்ததை அளித்துள்ள அவர், “வரும் காலங்களில் தமாகாவின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன். தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன்” என்றும், “பல ஆண்டுகளாக இளைஞரணித் தலைவராக இருந்துவிட்டேன். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பயணிப்பேன்” என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் கட்சிக்கு புதிய இளைஞர் அணித்தலைவராக யாரை நியமிப்பது? கட்சித்தலைமை ஆலோசனை செய்து வரும் அதே நேரத்தில் தற்போது தமிழ் மா நில கட்சியின் உறுப்பினராக மட்டுமே தொடரும் யுவராஜுக்கு தூண்டில் போட எடப்பாடி தரப்பு காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் களத்தில் அனலாய் பரவுகிறது தகவல்.