“குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக செந்தில்பாலாஜியை இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்த வேண்டும்” என சென்னை பிரின்சிபல் செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், “இன்று (22.07.2024) அவருக்கு முக்கியமான உடல் பரிசோதனைகள் நட்த்தப்பட வேண்டும்” என மருத்துவர்களும் அறிவுறுத்தி இருப்பதால் நேற்று முதலே பரபரப்பில் இருக்கிறது செந்தில் பாலாஜி வட்டாரம். சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதியன்று அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி. அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சையும், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் நடந்தது. அதன்பின், டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, உடல் நிலை சீரான பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
அதன்பின், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், அதற்காக பல்வேறு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி மற்றும் ரத்த பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கைதிகள் சிகிச்சை பெறும் தனி வார்டுக்கு மாற்றபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, இதயவியல் பரிசோதனை மேற்கொள்வதற்காக, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு அதே நாள் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். பின்னர் ழுழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கணையத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு சிறிய அளவிலான கொழுப்பு கட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும், கை, கால் மரத்து போகுதல் பிரச்சினையும் இருந்தது.
அதற்காக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறப்பு மருத்துவ குழு மூலம் செந்தில் பாலாஜிக்கு 22 நாள் தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பில் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலையை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்து வருகிறார்கள். இதற்கிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று மாலை 3.40 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் பாதுகாப்பில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருதயவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கும் மருத்துவர்கள் அதை உறுதிப்படுத்தவும், மேல் சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக அங்கு அவருக்கு இருதயவியல் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையில்தான் நீதிமன்றமும் அவருக்கு ஒரு உத்தரவை ஏற்கனவே பிறப்பித்து இருந்தது.
அதாவது, அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக செந்தில்பாலாஜியை இன்று (22.07.2024 – திங்கட்கிழமை) ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டிருந்தது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட். தற்போது அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவாரா? இல்லையா? என்பது இன்று தெரியவரும். இதனால், மருத்துவமனை வளாகம் முழுக்க செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் குவிந்திருப்பதால் பரபரப்பில் உள்ளது ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை.