ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள நிதிஆயோக் பட்டியலில் தமிழகத்தில் கல்வி தரம் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக தெர்வித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வினாடி வினா போட்டியும், தேதி சொல்லும் தேதி என்ற வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவும் நேற்று (20.07.2024) திருச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், நம்முடைய முதல்வர் நமக்கான திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதற்கு உதாரணம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வௌியிட்டுள்ள நிதிஆயோக் பட்டியலில் தமிழக கல்வியின் தரம் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது. இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். இளைஞரணி தொடங்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் எனவே இந்த நாளில் நம்முடைய இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” எனப் பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.