தனது அரசியல், சமூக செயல்பாடுகள் காரணமாக தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதையும் உணர்ந்திருந்த காரணத்தால், ‘திருமணமே வேண்டாம்’ என்ற முடிவில் இருந்த ஆம்ஸ்ட்ராங், சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்த பொற்கொடியை கடந்த 2016ஆம் ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பின் இருவருக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் போது அங்கு வருகை தந்திருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அம்பேத்கரின் அரசியல் குருவான சாவித்திரி பாய் பூலேவின் பெயரான ‘சாவித்ரி பாய்’ என்று பெயர் சூட்டினார். திருமணமான பிறகு ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்து பொற்கொடியும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கறிஞர் பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ‘ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை கட்சியினர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், பொற்கொடி, தான் மாநில தலைவராக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்தே பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தமிழக தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தமது முழுப்பெயரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்பதற்கு பதிலாக தனது கணவரின் நினைவாக இனி தன்னை ‘திருமதி. ஆம்ஸ்ட்ராங்’ என அழைக்குமாறு வேண்டுகோளும் விடுத்திருந்தார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
தமிழகத்தை பொறுத்த வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு என குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி எதுவும் இல்லாத நிலையில், தேசியக் கட்சியின் ஒரு அங்கமாக மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வந்தது பி.எஸ்.பி. இந்நிலையில், அதன் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கிளப்பிய தேசிய அளவிலான எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் இருப்பானது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த நிலையில்தான் அதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஆனந்தன். மேலும், மாநில நிர்வாகிகள் சிலரும் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளதால் வட மாநிலங்களில் மட்டுமே வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பி.எஸ்.பி. தமிழகத்தில் எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.