துவங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்..! – தமிழக கோரிக்கைகள் ஏற்கப்படுமா?

துவங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்..! – தமிழக கோரிக்கைகள் ஏற்கப்படுமா?

மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்ட நிலையில், 2024 – 2025 ஆண்டின் முக்கிய நிகழ்வான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சியானது கடந்த மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் வழங்கினார் நிதியமைச்சா்  நிர்மலா சீத்தாராமன்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று (21.07.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற விவகாரத்துறை கமிட்டி சார்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தொடரில் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா உட்பட 6 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், எனவே இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி சிவா – டி.ஆர்.பாலு

இதனிடையே, 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை, மத்திய நிதிநிலை அறிக்கையில் விடுவிக்க வேண்டுமென சமூக வளைத்தளம் மூலமாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வருமான வரிச் சுமையை குறைக்க வேண்டும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் பத்தாண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என நம்புவதாகவும் பதிவிட்டு இருந்தார் ஸ்டாலின்.

நிர்மலா சீத்தாராமன்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக இருக்கும் வேளையிலும், பிற முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என பலரும் எதிர்பார்க்கும் நிலையில், தமிழகத்தின் மூன்றாண்டு கோரிக்கை உட்பட முதல்வர் மு.க.ஸ்டாலினின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com