100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு, கடந்த 17ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் தீவிரமாக இருக்கும் சிபிசிஐடி போலீசார், சொத்து ஆவணங்கள் மோசடி தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவரது தரப்பினர் உடன் இருக்கலாம். ஆனால் விசாரணைக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர். விஜயபாஸ்கரின் மோசாடிகளுக்கு உதவி செய்ததாக ஏற்கனவே காவல் ஆய்வாளர் உட்பட சிலர் ஐது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் காவலுக்குப் பின் முக்கியப் புள்ளிகள் சிலர் கைதாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.