பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் இம்மாதம் 5 ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு முன் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கிறஞர் அருள், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில், இக்கொலையின் முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சம்போ செந்தில்.

ஏற்கனவே, ஏற்கனவே திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை, முத்தியால்பேட்டையில், ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியின் கூட்டாளியான விஜயகுமார் வெட்டிக் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த பல ஆண்டுகளாகவே தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரை பிடிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர் போலீசார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நோய்டாவில் சம்போ செந்திலை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்திருப்பதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், காவல்துறையில் அது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாக நிலையில், சம்போ செந்திலின் பராக்கிரமங்கள் குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை அள்ளித்தெளித்து இருக்கிறது.
வெங்கடேச பன்னையாரின் உறவினர்
தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர்தான் செந்தில் குமார் என்ற சம்போ. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டம் பயின்று வழக்கறிஞரான இவர், அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும் சாக்லேட் வியாபார் செய்து வந்திருக்கிறார். இவர், கடந்த சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்னர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பன்னையாரின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னராக இருந்த பாத்திமா பீவியின் உறவினரும், வெளிநாட்டு கரன்சிகளை மாற்றி தருவது, கஸ்டம்ஸில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை விற்பனை செய்வது, பல தீவிரவாத கும்பல்களுக்கு பணம் விநியோகிப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தவரும், அதிமுக கட்சிக்காரருமான ஷமீர் முகமது என்பவருக்கும் இந்த வெங்கடேச பண்ணையாருக்கும் நடந்த ஒரு பண பஞ்சாயத்தில் பிரச்சனை அதிகமாகி ஜெயா வரை சென்று அவரின் கட்டளையால் அப்போது தமிழ்நாடு காவல்துறையால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர் தான் வெங்கடேச பண்ணையார். அப்போது காவல் துறையினர் வெங்கடேச பண்ணையாரை தேடிய போது அவரை காட்டிக் கொடுத்த்தில் சம்போ செந்திலுக்கும் பங்குண்டு என்றும் சொல்லப்படுகிறது.
‘ஸ்கெட்ச்’ போடுவதில் நாயகன்!
1990களில் தென் சென்னையில் ரவுடி அயோத்தியா குப்பம் வீரமணி போல வடசென்னையில் கோலோச்சியவர் மாலைக் கண் செல்வம். இவர் அப்போது சென்னை ஹார்பரை முழுமையாக தன்கண்ட்ரோலில் வைத்திருந்த ஒரு பெரும் ரௌடி. சினிமாவில் வருவதை போல போவோர் வருவோருக்கு இடைஞ்சல் கொடுத்து நடு வீதியில் வைத்து செஸ் விளையாடுவது கேரம் விளையாடுவது எல்லாம் இவரின் செயல். அவரின் வலது கரமாக இருந்தவர் கல்வெட்டு ரவி. கல்வெட்டு ரவி தற்போது பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். எல்.முருகனுக்கும் அண்ணாமலைக்கும் நெருக்கம். மாலைக்கண் செல்வத்திற்கு வழக்கறிஞராக சென்று அதன் பிறகு மாலைக்கண் செல்வத்திற்கும் கல்வெட்டு ரவிக்கும் பல சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து துணையாய் இருந்தவர் தான் சம்போ செந்தில்.
ரவுடியாக ‘ஃபார்ம்’ ஆனது இப்படித்தான்!
கொஞ்சநாளில் மாலைக்கண் செல்வம் திருந்தி வாழ ஆரம்பித்தவுடன் மொத்தமாய் வடசென்னையை குத்தகைக்கு எடுத்தவர் கல்வெட்டு ரவி. அவரின் வலக்கரமாக செயல்பட்டு அவரோடு சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளவர்தான் செந்தில். அதோடு வழக்கறிஞரான செந்தில், பற்பல ரௌடிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டு வந்தவர். ஒருகட்டத்தில் அதாவது 2016-2020 காலகட்டத்தில் தனக்கென்று தனி நெட்வொர்க்கை ஏற்படுத்தி அவரே ரவுடியாக ஃபார்ம் ஆகி பிரபல தாதாவாகி இருக்கிறார்.
செந்திலைப் பொறுத்தவரை எந்தச் சம்பவத்துக்கும் நேரில் வர மாட்டாராம். ஆனால் கொலை, ஆள் கடத்தல் சம்பவங்களுக்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் கில்லாடி. அவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் மிஸ்சே ஆகாமல் சம்பவம் நிகழ்த்தப் படுமாம். அதன் காரணமாக ‘சம்பவம்’ செந்தில் என்று அழைக்கப்பட்டு வந்தவர், பேச்சுவழக்கில் ‘சம்போ செந்தில்’ என்று ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுகிறாராம்.
கடந்த 2020 ஆம் மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சிடி மணி ஆகியோர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசியதில் சம்போ செந்தில் தான் மூளையாக செயல்பட்டார். 2016-2020ல் பல கொலைகளுக்கு நேரிடையாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து பெரிய தாதாவாக மாறி இருக்கிறார் செந்தில்.
சரி, ஆம்ஸ்ட்ராங்கிற்கும் சம்போ செந்திலுக்கும் பிரச்னைதான் என்ன?
கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் தொழில் இந்த இரும்பு ஸ்கிராப் பிசினஸ் தொழில். அதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் சம்போ செந்திலுக்கும் தொழில் போட்டி இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதோடு திருவள்ளூரில் ஒரு பெரிய நிலத் தகராறிலும் இவருவருக்கும் மோதல் இருந்திருக்கிறது.
அப்போதுதான் முன்பே ஆம்ஸ்ட்ராங் மீது முன் விரோத கொலைவெறியில் இருந்த அதிமுக மலர்க்கொடி, அதிமுக ஹரிதரன், தமாகா ஹரிஹரன் பாஜக அஞ்சலை ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு, ஆருத்ரா என்று அனைவரும் ஒரு புள்ளியில் இனைந்து சம்போ செந்தில் தலைமையில் திட்டம் தீட்டில் இந்த படுகொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

போலீசை ஏமாற்றி தப்பிப்பதில் இந்த சம்போ செந்தில் பலே கில்லாடி. இதுவரை இவனை கைது செய்ததில்லை. எந்த வழக்கிலும் சிறைக்கு சென்றதில்லை! இவனது புகைப்படம் கூட ஒன்றிரண்டை தவிர வேறு எதுவும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அருணின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக சிக்காமல் இருந்த சம்போ செந்திலை நோய்டாவில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.