கிட்டத்தட்ட சுமார் இரண்டரை ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் இருந்த முன்னால் ஒன்றியச் செயலாளர் ஒருவரின் குமுறல்களால் சப்த நாடியும் அடங்கிப் போய் கிடக்கிறது தி.மு.க.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளராக இருந்தவர் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜி. ஒவ்வொரு முறையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி வரும்போது ஏர்போர்ட்டிலிருந்து அவரை வரவேற்பதற்காக வைக்கப்படும் கட்அவுட்டுகளில் அதிக அளவில் இருப்பதும் இவருடையதாகத்தான் இருக்கும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளராக அவரே நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டதால் வேட்பாளர் அறிவிப்பு வருவதற்கு முன்பே பூத் கமிட்டி வேலைகளைத் துவக்கி திருவெறும்பூர் தொகுதியை இவர் தனக்காக ரிசர்வ் செய்து வைத்திருந்த நேரத்தில்தான் திடீரென களமிறக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அப்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அன்பில் மகேஷ். அதுவரை திருவெறும்பூர் திமுகவின் பரபரப்பான களப்பணியாளராக இருந்த நவல்பட்டு விஜி ஓரங்கட்டப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் முனுமுனுத்த நிலையில், 2018ஆம் ஆண்டு திடீரென ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை, அவர் எங்கிருக்கிறார் என பலருக்கும் தெரியாத அளவில் அமைதியாகவே இருந்த நவல்பட்டு விஜி, கடந்த சுமார் 5 தினங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது எண்ண ஓட்டத்தை பதிவிட்டார்.
‘உழைக்கும் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்’ என ஸ்டாலின் கூறுவது போல இருக்கும் படத்தைப் போட்டு, அதனுடன், “தலைவரே உங்களுக்கு தெரியுது உங்கள் குடும்ப நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இது தெரிய மாட்டேங்குதே’ என்ற ரீதியில் அவர் பதிவிடவே, ஆரம்பித்து விட்டது பிரச்சனை. அதன் பிறகு, மகேஷ் பொய்யாமொழி அவர்களே,..’ என நேரடியாகவே அவருக்கு கடிதம் எழுதும் பானியில் சில பதிவுகளைப் போட, முகநூலியேயே மூழ்க ஆரம்பித்தனர் திருச்சி திமுக.வினர். அதே நேரத்தில், ‘ஆளுங்கட்சியின் சூழ்ச்சியில் சிக்கி விட்டார் நவல்பட்டு விஜி. எனவே, விரைவில் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகப் போகிறார்’ என்ற தகவலும் பரவவே, பரபரப்பானது திருச்சி திமுக.
இந்நிலையில், ‘நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?’ போன்ற கேள்விகளோடு நவல்பட்டு விஜியை தொடர்பு கொண்டு பேசினோம் நாம். “கிட்டத்தட்ட என்னுடைய 10வது வயதிலிருந்து திமுகவின் கொள்கைகளால் கவரப்பட்டு, இந்த இயக்கத்திற்காகவே வாழ்ந்தவன் நான். திருவெறும்பூர் தொகுதிக்கு மகேஷ் பொய்யாமொழியின் பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே என்னை அழைத்த அண்ணன் நேரு, ‘தலைவர் சொல்லி விட்டார். எப்பாடு பட்டாவது மகேஷை ஜெயிக்க வைக்க வேண்டியது உனது பொறுப்பு’ எனக் கூறினார், அவரிடம் கொடுத்த வாக்குறுதிப்படியே நானே நின்றதாக நினைத்து உழைத்தேன். மகேஷை வெற்றி பெற வைத்தோம். ஆனால், போஸ்டரில் அவரது படத்தை போடவில்லை எனக் கூறி, கட்சிக்காக சுமார் 40 ஆண்டுகாலம் உழைத்த, கட்சிக்காக எத்தனையோ கோடிகளை செலவு செய்த எனது ஒன்றியச் செயலாளர் பதவியை எந்தக் கேள்வியும் கேட்காமல் பறிக்கச் செய்தார். தற்போது அவர்தான் மாவட்ட செயலாளர். ஆனால், நான் இழந்த அந்த பதவியை மீட்டுத்தருவதாக கூறி தலைவரின் மகன் உதயநிதியிடம் அழைத்துச் சென்று வாக்குத்தவறி விட்டார். அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் எனது முகநூல் பதிவுகள். அதற்காக அதிமுகவிற்கோ அல்லது வேறு கட்சிகளுக்கோ செல்ல துளியும் எனக்கு எண்ணமில்லை. அப்படி செல்வதாக இருந்தால், எப்போதோ சென்றிருப்பேன். உயிர் உள்ளவரை திமுகதான். தலைமைக்கு நான் வைக்கும் ஒரே கோரிக்கையெல்லாம், ‘எந்த தவறும் செய்யாமல் என்னிடமிருந்து பறித்த அதே பதவியை எனக்கு மீண்டும் தாருங்கள்’ என்பதுதான்” எனக் கூறி முடித்தார் நவல்பட்டு விஜி.
தற்போது, திருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னால் எம்.பி.யுமான ப.குமார் திருவெறும்பூர் தொகுதியை குறி வைத்து தீயாய் வேலை செய்து வரும் நேரத்தில், அதே தொகுதியில் ஒரு மூத்த திமுக உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருக்கும் குமுறல்கள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் தெரியும் என்கிறார்கள் அப்பகுதி உடன் பிறப்புகள்.