நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி அதிமுகவின் 3 மாவட்ட செயலாளர்களுமே வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், அவர்கள் அத்தனை பேரையும் தோற்கடித்து மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் பெருவெற்றி பெற்றது திமுக. இதனால், உண்டான அதிர்ச்சியிலிருந்து அதிமுகவினர் மீள்வதற்கு முன்பாக, அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவினரிடம் விலை போனதாக கசியும் தகவல்கள் அக்கட்சியின் தொண்டர்கள் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்த விலைபோனோர் பட்டியலில், அதிமுகவின் வேட்பாளர் ஒருவரும் அடக்கம் என்பதுதான் விசயமே!
1. முசிறி ‘இளவரசர்’
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு முசிறியில் உள்ள அரசியல் ராசிக்கு பெயர்போன அந்த காம்ப்ளக்ஸில் ‘பிரின்ஸ்’ என்ற பெயரில் டெய்லர் கடை வைத்து, அதிமுகவிற்குள் நுழைந்த இவருக்கு அதிர்ஷ்டவசமாக சீட்டு கிடைத்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கடந்த 1997 ஆம் ஆண்டு இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் இந்த ‘இளவரசர்’. அதிமுகவின் மாவட்ட செயலாளராகவும் இவர் இருந்த காரனத்தால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் தனக்கென தனி ஆதரவு வட்டத்தை வளர்த்து வைத்து, இன்று வரை அதைக் கட்டி காப்பாற்றி வருபவர்.
அதே போல, மண்ணச்சநல்லூர் தொகுதியிலும் அவருக்கென தனி ஆதரவு வட்டம் உண்டு. இதனாலேயே, இதனாலேயே இவரை வளைத்துப் போட்ட அந்த திமுக முக்கியப் புள்ளியிடமிருந்து சில லகரங்களை இவர் பெற்றுக் கொண்டதாகவும், இதனால், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு விழ வேண்டிய சொற்ப அளவிலான வாக்குகள் திமுக மற்றும் வேறு கட்சிகளுக்கு பறிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவும், அதிமுக சார்பாக மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னால் அமைச்சருமான பரஞ்சோதியின் தோல்விக்கு ஒரு காரனமாக கூறப்படுகிறது.
2. ‘இது நம்மாளு…’
மூன்று முறை தொட்டியம் சேர்மனாக இருந்தவர். இவரும் திருச்சி திமுகவின் முக்கியப் புள்ளி ஒருவரும் ஒரே ஜாதி என்பதால், அந்த முக்கியப் புள்ளியின் ஆசியோடு திமுக ஆட்சிக்காலத்திலும் ஒரு முறை சேர்மன் பதவியை பிடித்தவர். சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு முசிறி அதிமுக வேட்பாளர் செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமான காரில் சில கோடிகள் மாயமான போது, இவரும் அந்தக் காரில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணச்சநல்லூர் தொகுதியின் சில பகுதிகள் முன்பு தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்டதாக இருந்ததால், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுகவினர் மத்தியில் இன்றும் தன் செல்வாக்கை மிச்சம் வைத்திருப்பவர். இந்த முறை முசிறி தொகுதியில் தனக்கு எம்.எல்.ஏ. சீட்டு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்த இவருக்கு கட்சி ‘கல்தா’ கொடுக்கவே, மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதிக்கு அல்வா கொடுப்பதற்காக இவரும் தனக்கு நெருக்கமான அந்த திமுக முக்கியப் புள்ளியின் மூலமாக சில லகரத்திற்கு விலை போனதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
தவிர, தனக்கு நெருக்கமான அந்த திமுக முக்கியப்புள்ளியின் அபிலாசையை நிறைவேற்றும் வகையிலும், “தனக்கு கிடைக்காதது ‘அவருக்கு’ கிடைக்க கூடாது” என்பதாலும், முசிறி அதிமுக வேட்பாளரின் தோல்விக்கு ‘போனஸாக’ உழைத்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
3. ‘பத்தவே பத்தாது…!’
திருச்சி மேற்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர். ‘தான்தான் மேற்கு தொகுதியின் வேட்பாளர்’ என்று உறுதியான உடனேயே தன்னுடைய தோல்வியை தனக்குத்தானே உறுதி செய்து விட்ட புத்திசாலி. காரனம், திமுக சார்பாக இவரை எதிர்த்து போட்டியிட்டது முன்னால் அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு..!
இதனால், தேர்தல் செலவுகளுக்காக கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட கோடிகளில் நான்கில் ஒரு பங்கை மண்டல தேர்தல் பொறுப்பாளர் தஞ்சை வைத்திலிங்கம் ‘கேட்டு’ வாங்கிக் கொண்டதால், வருத்தமாக இருந்திருக்கிறார். அதை திமுகவின் அந்த முக்கியை புள்ளி மூலமாக ‘சமன்’ செய்து விட்டதாகவும், இதனால், பெயரளவிற்கு வேலை செய்து விட்டு, பெரும்பாலான நேரம் கண்டோன்மென்ட் பகுதியில் தான் எடுத்திருந்த அறையிலேயே உற்சாகத்தில் ‘மிதந்ததாகவும்’ கூறப்படுகிறது. ‘வேட்பாளர்’ என்ற பெயரில் கட்சிப் பணம் சில கோடிகளை சுருட்டி விட்ட இவரது ‘நெக்ஸ்ட் டார்கெட்’ மாவட்ட செயலாளர் பதவி எனக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இந்த பட்டுவாடா அத்தனையும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அரசியல் புள்ளிகளுக்கு மிகவும் நெருக்கமான புகழ் பெற்ற அந்த தனியார் விடுதியின் அறை எண் 109ல் அரங்கேறியதாகவும், அப்போது, ‘முதல்வர் எடப்பாடியாரின் மகன் மிதுனுக்கு மிகவும் நெருக்கமானவர்’ என திருச்சி மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் பலராலும் நன்கு அறியப்பட்ட அந்த ‘சேர்மன்’ உடன் இருந்து அனைத்தையும் சுமூகமாக முடித்து வைத்ததாகவும் வெளியாகி இருக்கும் தகவல்கள் திருச்சி மாவட்ட அதிமுகவை கிறங்கடித்து வருகின்றன.
– வந்தியத்தேவன்