‘வைகோ இடம்பெற்ற கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக சரித்திரமே இல்லை’ என்ற வார்த்தைகளை பொய்யாக்கி விரைவில் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது திமுக. அதாவது, கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ. அடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதனால் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல், மதிமுகவுக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பிடித்த மதிமுகவிற்கு பல்லடம், மதுராந்தகம், மதுரை – தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் மற்றும் சாத்தூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், பல்லடம் மற்றும் மதுராந்தகம் தவிர மற்ற 4 இடங்களிலும் வெற்றிவாகை சூடியுள்ளது மதிமுக. இதனால், உற்சாகத்துடன் வலம் மரும் வைகோ, புதிதாக அமைய உள்ள திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறது திமுக வட்டாரம்.
இந்நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பே தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளார் வைகோ. அதன்படி, கொரோனாவின் 2ஆம் அலை பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,
* அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற எண்ணிக்கையிலான மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு உடனே பணியில் அமர்த்த வேண்டும்.
* பன்னோக்கு மற்றும் உயர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள, ‘செயற்கை சுவாசக் கருவியுடன்’ கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. குறைந்தபட்சம், உயர் அழுத்த மூச்சுக்கருவிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளையாவது ஒன்றிய தலைமை அரசு மருத்துவமனைகளில், உடனடியாக உருவாக்க வேண்டும். இதன்மூலம், நிறைய உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
* இந்தியா முழுமையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ‘ரெம்டெசிவிர்’ மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில், மராட்டியம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் வங்காள தேசத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து வருகின்றது. அதைப் போல, தமிழக அரசும், ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும்.
* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் எந்த வகையான முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் உரிய, பாதுகாப்பான முக கவசங்களைத்தான் அணிந்து உள்ளார்களா? என்பதை, காவல்துறையின் மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ.