
‘நாளை (மே 7ஆம் தேதி) பதவியேற்கவிருக்கும் திமுகவின் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி?’ என்ற கேள்வி தமிழகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்த பலரும், ‘தங்களுக்கு இம்முறை அமைச்சர் பதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதே போல, அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் 40 சதவீதம் வரை வாய்ப்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்களும் சிறகடித்து பறக்கும் நிலையில் நிலையில், அவர்களும் தங்களுக்கு வேண்டிய முக்கிய பிரமுகர்கள் மூலம் திமுக தலைமையிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அண்ணா அறிவாலய வட்டாரமே உச்சகட்ட பரபரப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ‘திருச்சியில் யார் யாருக்கு அமைச்சர் பதவி?’ என்பது குறித்தும், அவர்கள் வகிக்கவிருக்கும் துறைகள் குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி, கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மிக அதிக இடங்களில் திமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரனமாகவும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலுமே திமுக பெருவெற்றி பெற முக்கிய காரனமாக இருந்து களப்பனியாற்றியவருமான முன்னால் அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியும்,
அதே போல, திருவெறும்பூர் தொகுதியில், அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், தே.மு.தி.க. எக்ஸ்.எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோரின் வியூகங்கள் அனைத்தையும் முறியடித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெறச்செய்த தொகுதியின் ‘சிட்டிங்’ திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கவிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. இதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் குடும்பம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தோடு 3 தலைமுறையாக நெருக்கமான உறவு பூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– வல்லவராயன்