எதிர்க்கட்சி தலைவர் யார்..? –  அடுத்த கூத்துக்கு தயாராகும் அதிமுக!

எதிர்க்கட்சி தலைவர் யார்..? – அடுத்த கூத்துக்கு தயாராகும் அதிமுக!

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 158 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கவிருக்கிறது திமுக. அதே நேரத்தில், 76 இடங்களைப் பிடித்த அதிமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அமரவிருக்கிறது. இந்நிலையில், ‘கேபினட் மினிஸ்டர் அந்தஸ்துள்ள எதிர்க்கட்சி தலைவராக ஓ.பி.எஸ்.சா அல்லது ஈ.பி.எஸ்.சா?’ என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடம்  அதிகரித்துள்ளது.

                கடந்த 2016 டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு முன்பே பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன் அவர் கை காட்டிய எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். பின்னர், தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.சும், முதல்வர் ஈ.பி.எஸ்.சும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கட்சியை நடத்தி வந்தனர். அப்போது, 2017 செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், ‘சசிகலா தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது’ என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன்…

இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின்னர், சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை நகர உரிமையியல் நீதிபதி ரவி முன்பு அவ்வழக்கு விசாரனைக்கு வந்த போது, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் அதிமுகவிற்கு எதிரான வழக்கை கை விடுவதாக டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும் கூட, தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கருதினர் அதிமுகவினர். ஆனால், ‘அதற்கு தற்போது வாய்ப்பே இல்லை’ என்ற சூழல் நிலவி வரும் நிலையில் தான், ‘புதிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக அமரப்போது யார்?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம், ‘வரவிருக்கும் தேர்தலில் ‘முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிருத்துவது ?’ என்ற கேள்வி எழுந்த போது, ‘அதை தேர்தலுக்கு பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ என நழுவினார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம். அப்போது, கொங்கு மண்டலத்தில் அதிக எம்.எல்.ஏக்கள் இருந்ததாலும், பெரும்பாலான நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்ததாலும் எடப்பாடி பழனிச்சாமியையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஓ.பி.எஸ். இந்நிலையில்தான், முதல்வர் வேட்பாளர் என்ற தகுதியை ஏற்கனவே எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்த காரனத்தாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாலும் எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமர தனக்கு மட்டுமே தகுதி உள்ளதாக கருதுகிறாராம் ஓ.பி.எஸ். தவிர, அதிமுகவில் ஏற்கனவே தன்னுடைய செல்வாக்கு குறைந்து வருவதாக கருதும் அவர், ‘இனிமேலும் சுதாரிக்காவிட்டால் இழப்பு தனக்கும் கட்சிக்கும்தான்’ என கருதுவதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.

அதே நேரத்தில், ‘ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தது, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு காரனமாக வடக்கு மாவட்டங்களில் அதிக எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெறச்செய்தது, தன்னுடைய கொங்கு மண்டலத்தை சிந்தாமல் அள்ளியதோடு தமிழகத்திலேயே 3வது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றது, இது அனைத்திற்கும் மேலாக இந்த தேர்தலில் அத்தனை கருத்து கணிப்புகளையும் மீறி அதிமுகவிற்கு கிடைத்த கவுரவமான தோல்வி ஆகியவை தன்னுடைய அனுகுமுறையாலும் செயல் திட்டங்களாலும் மட்டுமே கிடைத்தது’ என கருதும் எடப்பாடி பழனிச்சாமி, தான் இணை ஒருங்கினைப்பாளராக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி தனக்கே இருப்பதாக கருதுகிறாராம்.

                இப்படி, அதிமுகவின் இரண்டு கூடாரங்களிலும் எதிர்க்கட்சி தலைவர் குறித்த எதிர்பார்ப்பு கனன்று கொண்டிருக்கும் நிலையில், ‘விரைவில் கூடவிருக்கும் பொதுக்குழுவில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?’ என்ற டென்சனும் எகிறிக் கொண்டிருக்கிறது அதிமுகவில்.

டிட்பிட்ஸ்: எதிர்க்கட்சித் தலைவர் என்ற கேபினட் அந்தஸ்துள்ள பதவியை பெறுவதற்காக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கொங்கு மண்டலத்து முக்கிய அமைச்சருமான செங்கோட்டையனும் துண்டு விரித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com