
தான் கோலோய்ச்சிய சென்னை, வாழ வைக்கும் என நம்பிய வடக்கு, தெற்கு மற்றும் குறி வைத்த டெல்டா மாவட்டங்களின் தேர்தல் ரிசல்ட் குப்புறத்தள்ளியதால் கடந்த இரு தினங்களாக யாரிடமும் அதிகம் பேசாமல் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்திலேயே இருக்கிறார் முன்னால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஒரே ஒரு முறை மட்டும், ‘என்னண்ணே…?’ என ஓ.பி.எஸ்.சிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான், சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தை மே 7 ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என தேதி குறிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முன்பு, நேற்று காலை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைத்த கையோடு, “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரிலேயே வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொன்னையன், செம்மலை, தங்கமணி, கே.பி.அன்பழகன், கருப்பணன், சேவூர் ராமச்சந்திரன், கோகுலஇந்திரா மற்றும் மதுரை ராஜன்செல்லப்பா ஆகியோர் அதிகாலையிலேயே வந்து விடவே, அவர்களை வைத்துக் கொண்டுதான் இந்த வேலைகளை முடித்திருக்கிறார் எடப்பாடியார். பின்னர், 2 பா.ம.க. எம்.எல்.ஏ.க்களோடு, சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற 7 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் வாழ்த்துப் பெறுவதற்காக எடப்பாடியாரின் இல்லத்திற்கு வரவே, மதியம் 2 மணிக்கு மேல் அவர்களை சந்தித்து வாழ்த்தி அனுப்பினார் முன்னால் முதல்வர் எடப்படி பழனிச்சாமி. இந்த சூழலில், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் சிலரின் போன் கால்களை மட்டும் ‘அட்டன்’ பன்னிய எடப்பாடியார், அவர்கள் கூறுவதை மட்டும் காதில் கேட்டுக் கொண்டு, ‘பார்ப்போம், ஆகட்டும்..’ என இரண்டு வார்த்தைகளில் மட்டும் பதில் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், ‘என்னதான் நடக்கிறது எடப்பாடியார் கேம்ப்பில்?’ என அறிந்து கொள்வதற்காக எடப்பாடியாருக்கு நெருக்கமான சேலத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம் நாம். “தேர்தலுக்கு முன்பு என்னதான் கருத்துக் கணிப்புகள் அதிமுகவிற்கு எதிராக வந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார் எடப்பாடியார். அவரைப் போலவே ஓ.பி.எஸ்.சும் நம்பியிருந்தார். இப்போதைக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருந்து செயல்பட வேண்டும் என்பதே அவரின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது” என்றவரிடம், “அப்படியென்றால், எதிர்க்கட்சி தலைவர்…” என இழுத்தோம் நாம். “இதுநாள் வரை முதல்வராக யார் இருந்தார்களோ, முதல்வர் வேட்பாளராக யார் ‘புரோஜெக்ட்’ செய்யப் பட்டார்களோ அவரே எதிர்க்கட்சி தலைவர் என்ற வரலாறே உள்ளது. எனவே, சந்தேகமே இல்லாமல், முன்னால் முதல்வர் எடப்பாடியாரே தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். இதற்கு, ஓ.பி.எஸ்.சும் ஆதரவளிப்பார் என நம்புகிறோம்” என்றார் அவர்.

அதே நேரத்தில், ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து இது வரை இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியிருந்தாலும், ‘ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஒற்றைத் தலைமையை நோக்கி அதிமுக தனது முதல் அடியை எடுத்து வைக்க தயாராகிறது என்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
- வந்தியத்தேவன்