தமிழக தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், ‘180க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றிவாகை சூடும்’ என இந்திய ஊடகங்கள் அனைத்தும் பறைசாட்டிக் கொண்டிருக்க, ‘அதெல்லாம் இல்லீங்க, ஹேட்ரிக் அடிக்கப் போறோம் நாங்க…’ என தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது அதிமுக. இந்நிலையில், ‘ஆண்டவனே அவரு மட்டும் ஜெயிச்சிடக் கூடாதுப்பா…” என ஒரு வி.ஐ.பி. திமுக வேட்பாளரை மனதில் வைத்து அக்கட்சியின் மாவட்ட செயலாளரே கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் கூத்து நடந்து கொண்டிருக்கிறதாம் இராமநாதபுரத்தில்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான முதுகுளத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்டவர் முன்னால் அமைச்சரான ராஜகண்ணப்பன். யாதவ மக்களின் பேராதரவைப் பெற்ற ராஜகண்ணப்பன் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து திமுகவிற்கு தாவிய போதே, அவருக்கு தேர்தலில் சீட்டும், வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியும் தருவதாகவும் திமுக தலைமை வாக்குறுதி தந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த தேர்தலில் யாதவ சமுதாய மக்கள் அதிகம் உள்ள முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது.
ராஜகண்ணப்பன்
தற்போது, அமைச்சரவை பட்டியலை தயாரிக்கும் பணியில் சென்னை அறிவாலயத்தின் தலைமை பீடதாரிகள் அனைவரும் மும்முரமாக இருக்க, தேர்தல் முடிந்ததிலிருந்தே சென்னையில் முகாமிட்டிருக்கிறார் இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கம். இந்நிலையில், “வேட்பாளர்கள் அனைவரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை சுற்றியே வந்து கொண்டிருக்க, முத்துராமலிங்கம் மட்டும் அறிவாலயத்தை வலம் வருவதற்கு என்ன காரனம்?” என்பதை அறிவதற்காக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம் நாம்.
காதர்பாட்சா முத்துராமலிங்கம்
“வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது ஒரு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவியாவது வழங்குவது என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. அப்படி வழங்கப்படும் அந்த அமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் முத்துராமலிங்கம். காரனம், முதுகுளத்தூரில் போட்டியிட்ட எக்ஸ் மினிஸ்டர் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றால் மூத்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு வாய்ப்பளிக்க கூடாது என்பதற்காகத்தான் சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார் ‘மாவட்டம்’. இதற்காக, ஒருபுறம் கனிமொழிக்கு நெருக்கமான வட்டாரத்தின் மூலமாகவும், மறுபுறம் உதயநிதி ஸ்டாலினுக்கு வேண்டிய நபர்கள் மூலமாகவும் காய் நகர்த்தி வருகிறார் மா.செ. இது வரை நல்ல தகவல்களே கிடைத்துள்ளன. இருந்தாலும், ராஜதந்திர வேலைகளில் ராஜகண்ணப்பன் கில்லாடி என்பதால், சற்று கலக்கத்தில் இருக்கிறார் முத்துராமலிங்கம். ஆனால், ராஜகண்ணப்பன் தோற்று விட்டால் இந்த பிரச்சனைக்கு வேலையே இல்லை. இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே அமைச்சர் முத்துராமலிங்கம்தான்….!” என புன்சிரித்தனர் அவர்கள்!
அடேங்கப்பா…!
- ராஜமாதா