
சட்டப் பேரவை தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே திமுகவிற்கான மக்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தன ஊடகங்கள். ‘ஆளுங்கட்சினான அதிமுக 30 முதல் 45 இடங்கள் வரை மட்டுமே ஜெயிக்கும்’ என்றும், ‘திமுக கூட்டணி 170 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும்’ என்றும் செய்திகள் வலம் வரத்துவங்கின. இதற்கு, மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யுடன் அதிமுக கூட்டணி அமைத்ததும், டிடிவி தினகரனின் அமமுக அதிமுகவின் ஓட்டுக்களை தென் மாவட்டங்களில் அக்கட்சி வாரிச்சுருட்டுவதுமே முக்கிய காரனங்களாக கூறப்பட்டன. அதே போல கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அமமுகவுடன் கூட்டணியில் சேர்ந்ததால் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட இந்த முறை அதிமுக கூட்டணியின் வாக்கு வங்கியில் பலத்த சரிவு ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்திருந்தன ஊடகங்கள்.

தேர்தல் தினத்தன்றும், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கே அதிக வாக்குகள் விழுந்ததாக பரவலான பேச்சு அடிபட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த தேர்தலுக்கு பிந்தைய ‘எக்ஸிட் போல்’ கணிப்புகளும், ‘திமுகவே அதிக இடங்களை பிடித்து இந்த முறை ஆட்சி அமைக்கும்’ என்றும்,’ மு.க.ஸ்டாலின் முதல்வராவார்’ என்றும் கூறி வந்தன. குறிப்பாக, ஆட்சியில் இருந்த போது அதிமுகவிற்கு சாதகமான கருத்துக்களை பல்வேறு முறை வெளிப்படுத்திய இந்தியா டுடே போன்ற ஊடகங்களும், சி ஓட்டர், ஆக்ஸிஸ் போன்ற தனியார் நிறுவனங்களும், ‘திமுகவே தனிப்பெறும் கட்சியாக உருவெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமரும்’ என கூறின. இதனால், அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களும், அதன் முக்கிய கூட்டணி கட்சியான பி.ஜே.பி.யும் பீதியில் ஆழ்ந்தன.
அதே நேரத்தில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் போன்றவர்கள், ‘அதிமுக ஹேட்ரிக் அடிக்கும்’ என்றும், ‘மூன்றாவது முறையாக அதிமுகவே ஆட்சி அமைக்கும்’ என்றும் மீண்டும் மீண்டும் கூறி தொண்டர்களின் மனதில் உற்சாக டானிக்குகளை ஏற்றினர். இதற்கு, ‘மத்திய அரசிடமிருந்து அதிமுகவிற்கு சாதகமான சிக்னல் கிடைததது’ எனவும், ‘நீங்க கவலைப் படாதீங்க. நாங்க பார்த்துக்கிறோம்…’ என்ற அமீத்ஷா தரப்பில் கூறப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், மே 2ஆம் தேதியான இன்று தமிழகம் முழுக்க உள்ள 234 தொகுதிகளுக்கும் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியிருக்கிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கிய நிலையில், ஒரு மேசைக்கு 500 வாக்குகள் வீதம் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், காலை 9.40க்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின்படி, அதிமுக கூட்டணி 15 இடங்களிலும், திமுக கூட்டணி 12 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.
அதே நேரத்தில், அடுத்த சில நிமிடங்களில் வெளியான ‘நீல்சன்’ நிறுவனத்தின் கணிப்பின்படி அதிமுக 25 இடங்களிலும், திமுக 25, பா.ம.க.- 3, பி.ஜே.பி., சி.பி.ஐ., சிபி.எம். மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை தலா 1 இடத்திலும் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது, அதிமுக வட்டாரத்தில் மகிழ்ச்சியையும், திமுக தரப்பில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலின் போது 70 வயதிற்கு மேற்பட்ட்ட முதியவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் ஆகியோரின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறும் முறை அறிமுகப்பட்டதால், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலை விட இம்முறை தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தவிர, முதற்கட்டமாக எண்ணப்படும் தபால் வாக்குகளில் எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறதோ அந்தக் கட்சியே மீண்டும் அரியணை ஏறும் எனவும் சென்டிமென்டாக கூறுகிறார்கள் அரசியல் அனுபவஸ்தர்கள். இது, அதிமுக தரப்பில் ‘ஹேட்ரிக்’ மூடை கிளறி விட்டிருந்தாலும், ‘பொறுத்திருந்து பாருங்கப்பா…’ எனக் கூறி வருகிறார்கள் திமுகவினர். அதற்கேற்ப காலை 10.15 மணி நிலவரப்படி திருச்சியில் மொத்தமுள்ள 9 இடங்களிலும் இது போல தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலும் ஏறுமுகத்தில் இருக்கிறது திமுக…!