கொரோனா வைரஸின் 2ஆம் அலையானது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழகமெங்கும் நேற்று (மே – 10) முதல் மே – 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மளிகை, காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மே – 24க்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வராது’ எனவும், ‘தேவை ஏற்பட்டால் தொழில்துறையினருடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்’ எனவும் கூறியிருந்தார். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வரும் என்றே தோன்றுகிறது.
அதாவது, இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, புதுச்சேரி, அருனாசலபிரதேசம், அஸ்ஸம், கோவா, ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஸ்மீர், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா மற்றும் நாகலாந்து, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி ஏற்படும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா, மஹாராஸ்டிரா ஆகியவை மிக மோசமான பாதிப்புகளை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவல்லூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறி இருகின்றனர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.
இந்த சூழலில், “அரசு மற்றும் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின் படி வெளியில் செல்லும் போது தனி மனித இடைவெளியோடு முகக்கவசம் அணிந்து செல்வது மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் செல்வது போன்றவையே கொரோனா பரவலை குறைத்து மீண்டும் ஒரு முழு ஊரடங்கு வருவதை தடுக்கும்” எனக் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
– வல்லவராயன்