– அருள்வாக்கு சொன்ன நமோநாரயண சுவாமிகள்…!
ஏகப்பட்ட ‘ஹேர்பின் பெண்டுகளை’ தாண்டி மெல்ல மெல்ல மலையேறிக் கொண்டிருந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் திடீரென நின்று போனதை ஆண்டாண்டு காலமாய் அவரின் ரசிகர்களாக இருக்கும் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில், ‘ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்த தமிழக மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லையே’ என்ற மனஉளைச்சலும் நடிகர் ரஜினிக்கு இருப்பதாக கூறுகிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். இதனால், ‘இதுவரை தான் முன் வைத்த காலை பின் வைக்காத ரஜினி நேரடியாக களத்தில் இறங்க முடியாவிட்டாலும் அவர் துவக்கவிருந்த அரசியல் கட்சி குறித்த பாசிடிவான தகவல் விரைவில் வெளியாகும்’ எனக் கூறப்படுகிறது.
இது பற்றி நடிகர் ரஜினியின் போயஸ் இல்லத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒருவரிடம் பேசினோம் நாம். “கடந்த 2017 டிசம்பர் மாதம் 31ஆம் தேதி புதிய கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிட்ட உடனேயே ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, ஒரு பலமான அரசியல் கட்சி அளவிற்கு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டார் ரஜினி. இதுவரை தமிழருவி மணியனை மட்டுமே பலரும் அறிந்திருந்த வேளையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தியும் இந்த கட்டமைப்பின் பின்னணியில் இருக்கிறார். ‘வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவது உறுதி’ என்ற நம்பிக்கையோடும் இருந்தார் ரஜினி.
மு.க.அழகிரி துவங்கப்போகும் கட்சி குறித்த பணிகளை டெல்லியில் பார்த்து வந்த அதே வழக்கறிஞர்தான் ரஜினி கட்சி பதிவுக்கான பணிகளையும் செய்து வந்தார். முக்கியமான ரஜினி மன்ற நிர்வாகிகள்தான் நேரடியாக டெல்லிக்கு சென்று இந்த பணிகளை கவனித்து வந்தனர். 3 பெயர்கள் கொடுத்திருந்ததில், ரஜினியின் மனநிலைக்கேற்ப ‘மக்கள் சேவைக் கட்சி’ என்ற பெயரும், ஆட்டோ சின்னமும் கூட தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டிய நேரத்தில் உடல்நிலை காரனமாக, ரஜினியின் மகள்கள் சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் வற்புறுத்தலின்படிதான் ‘அரசியலுக்கு வரவில்லை’ என அறிவித்தார் ரஜினி. ஆனால், அதுவே அவரது அதிகபட்சமான மன உளைச்சலுக்கு காரனமாகி விட்டது.
இந்நிலையில்தான் ரஜினியின் ஆன்மீக குருவான நமோ நாராயணா சுவாமிகள் ரஜினியை பார்ப்பதற்காக நேரில் வந்திருந்தார். அவருடன் பேசியபிறகுதான் உற்சாகமாக இருக்கிறார். விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு அது மட்டுமே கூற முடியும்” என்றார் அவர்.
அதாவது, தனது அரசியல் வருகை தடைபட்டது குறித்த செய்தி வெளியானதுமே ரஜினியின் தீவிர ரசிகரான விழுப்புரம், பாணாம்பட்டு ராஜ்குமாரின் தற்கொலை முடிவு ரஜினியை கடுமையாக பாதித்து விட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற விசயங்களை பெரிது படுத்தக்கூடாது என்பதற்காக ரஜினி அமைதி காத்து வந்த நிலையில், தனது அறிவிப்புக்குப் பிறகு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் மனநிலை பற்றியும் அறிந்து கொண்ட ரஜினி, அதன் பிறகுதான், ‘இன்றைய அரசியல் வட்டத்தில் இருந்து மக்களை மீட்டெடுப்பதும் முக்கியம். இப்போது நடக்கவில்லையென்றால் அது எப்போதுமே நடக்காது’ என தனது குடும்பத்தாரிடம் கடந்த 2 நாட்களாக புலம்பியபடியே இருந்ததாகவும், முக்கியமான தொலைபேசி அழைப்புகளைக் கூட ‘அட்டன்’ பன்னவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், ‘தேர்தல் கமிசனில் பதிவு செய்யப்பட்ட தனது கட்சியை வேறு யார் தலைமையிலாவது துவங்கி விடலாமா?’ என்ற யோசனையும் ரஜினிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், இதே கருத்தை ரஜினியிடம் கூறிய நமோ நாராயணா சுவாமி, வெற்றிக்கு அச்சாரமாக ஒரு ஸ்படிக மாலையையும் ரஜினியின் கழுத்தில் அணிவித்து வாழ்த்து கூறினாராம்!
தற்போது, மீண்டும் தனது சிறுநீரக பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் ரஜினி, விரைவில் அது பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என கூறப்படுகிறது. அப்படி அறிவிக்கப்படும் போது, ஒருவேளை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் அல்லது வேறு ஒரு ரஜினிமன்ற மூத்த நிர்வாகி தலைமை ஏற்கலாம் எனவும் தகவல்கள் கசிகின்றன. ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி அமைதியான ஆன்மீக எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்திய கரூர் ரசிகர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி விடும் என்றே தெரிகிறது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனக் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!