தமிழக முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி இருந்த வரை அரசு இயந்திரத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் ஜாபர்சேட் ஐ.பி.எஸ். தினமும் அதிகாலையில் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த இவரை சந்தித்து, நடந்தவை, நடக்கவிருப்பவை என அத்தனை விசயங்களையும் தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் கட்சியின் மூத்த பிரமுகர்களையும் முக்கிய அதிகாரிகளையுமே கருணாநிதி சந்திப்பது வழக்கம். எவ்வளவு ரகசியமாக இருந்தாலும் சரி, ‘போனில் பேசினால் போதும் அது ஜாபரின் காதுகளுக்கு போய்விடும்’ என அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை அத்தனை பேருக்குமே ஒரு அச்சம் இருந்த காலகட்டம் அது.
2011 தேர்தலின் போது, ‘திமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறார்’ என்ற குற்றச்சாட்டு கிளப்பப்பட்டு, அதன் அடிப்படையில் ஒரு காவல்துறை அதிகாரியை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்த சம்பவம் இந்திய தேர்தல் கமிசன் வரலாற்றிலேயே முதன்முறையாக அரங்கேறியது. காலங்கள் மாறியதும், சூழலும் தலைவிரி கோலமாக மாறியது. அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதும் அவரின் முதல் ‘டார்கெட்டே’ ஜாபர்சேட் தான். அம்பாக செயல்பட்டது ‘சவுக்கு’ சங்கர்.
வறட்சி மாவட்டமான இராமநாதபுரத்தில் தென்கோடி எல்லையில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமை பாதுகாக்கும் ‘டம்மி’ போஸ்டுக்கு மாற்றப்பட்டார் ஜாபர்சேட். அடுத்து, கடந்த 2008ஆம் ஆண்டு, சென்னை திருவான்மியூர், காமராஜர் நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டுமனை எண் 540ஐ ஜாபர்சேட்டுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வழக்கும் பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. பிறகு, சுமார் பத்தாண்டுகள் கழித்து ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ என ஜாபருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு கூறிய பிறகு, அதுவும், முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகுதான் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் இயக்குனராக ‘டீசன்ட் போஸ்டிங்கிற்கு வந்தார் ஜாபர் சேட்.
அப்போது, தமிழக அரசு தேர்வாணையத்தில் நடந்த முறைகேடு சி.பி.சி.ஐ.டி. வசம் இருக்கவே, விறுவிறுவென தகவல்களை தோண்டத் துவங்கிய ஜாபர்சேட்டைக் கண்டு உயரதிகாரிகள் மற்றும் சில அமைச்சர்கள் மிரளத் துவங்கினர். அதன் பிறகு, சிவில் சப்ளை சி.ஐ.டி., இறுதியாக தீயணைப்புத்துறை இயக்குனர் என மீண்டும் ‘டம்மிக்குள்’ தள்ளப்பட்ட ஜாபர்சேட், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அப்போது சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவின் போது கூட, ‘மண்டபம்’ அனுபவத்தை மறைமுகமாக நினைவுபடுத்திப் பேசியதால், ‘தான் பழி வாங்கப்பட்ட சம்பவத்தை ஜாபர்சேட் இன்னும் மறக்கவில்லை’ எனக் கூறுகிறது காவல்துறை வட்டாரம்.
இப்போதைக்கு அதுவல்ல முக்கியம். பணி ஓய்வு பெற்று விட்ட ஜாபர்சேட்டின் திறமையை தந்தையைப் போலவே தானும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறாராம் திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின். இதற்காக, விரைவில் ஸ்டாலினை ஜாபர்சேட் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வடமாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கியமான ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு இங்குள்ள திராவிடக்கட்சி ஒன்றில் இணைந்து தேர்தலிலும் போட்டியிடலாமென தகவல்கள் கசியும் நேரத்தில் ஸ்டாலின் – ஜாபர்சேட் சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் பெறும் எனக் கூறப்படுகிறது.
ஜாபர்சேட் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தையையும் இங்கே நாம் நினைவுபடுத்த வேண்டும். அது, “நான் கருணாநிதியால் கூர் தீட்டப்பட்ட வாள்!”