தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் வருகிற 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சிக்கான முதல் அறைகூவலை விடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகன்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார் துரைமுருகன்.
இதனையடுத்து திமுக சார்பாக வெற்றி பெற்ற அக்கட்சியின் 125 எம்.எல்.ஏ.க்களும் இன்று இரவு அல்லது நாளை காலை தங்களின் சொந்த தொகுதிகளில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெறுவார்கள் என்றும், மாலையில் நடைபெறும் அந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அனைவரும் ஒருமனதாக தேர்ந்துப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சந்தோசக் கூடலுக்கு தயாராகிறது அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம்.