– ஆவின் சர்ச்சை
அடுப்பில் வைத்தால் ஆவின் பால் பொங்குகிறதோ இல்லையோ, அங்கு நடக்கும் ஊழல்கள் மட்டும் சூடு பன்னாமலேயே பொங்கி வழிகின்றன. அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியும் தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.பி.ராஜாவின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியை சந்தித்து வருகிறது தேனி.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களை விரைந்து வழங்குவதற்காக கடந்த சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகமெங்கும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தேனி, மதுரை உட்பட தமிழகமெங்கும் உள்ள ஆவின் பணியிடங்களை விரைந்து நிரப்பி கல்லா கட்டும் வேலைகள் ஜரூராக நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதில், கடந்த நவம்பர் மாதம் தேனி ஆவினில் 30க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு கடந்த வாரம் தேர்வு நடத்தப்பட்டதாகவும், அந்த வேலைக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 15 லட்சங்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த தொகையை கொடுத்தவர்களுக்கு மட்டும் முதல்நாளே கேள்வித்தாள் வழங்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
தவிர, ‘ராணுவத்தினருக்கான சிறப்பு ஒதுக்கீடு, விதவைகளுக்கான ஒதுக்கீடு, சமூக நீதிக்கான பணி நியமன சுழற்சி முறை ஒதுக்கீடு போன்றவை பின்பற்றப்படாமல் அத்தனை பணியிடங்களுக்கும் மொத்தமாக வாரிச்சுருட்டி விட்டார் ஓ.ராஜா’ என குமுறுகிறார்கள் படிப்பை மட்டுமே நம்பியிருந்த விண்ணப்பதாரர்கள். அதிலும், பட்டப்படிப்பு தகுதியுள்ள வேலைக்கு டிப்ளமோ மட்டுமே படித்தவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை பணி நியமனம் செய்யும் பணிகள் வேக வேகமாக நடப்பதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள் சிலர்.
இதில், பால்வளத்துறை மேலாண்மை இயக்குனர் நந்தகோபால் ஐ.ஏ.எஸ்.சுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரது ஒத்துழைப்புடன் தற்போது பணம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டியும், மேலும் 29 புதிய பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடக் கோரியும் சென்னை சென்று நந்தகோபாலை சந்தித்து விட்டு வந்திருக்கிறாராம் தேனி ஆவின் சேர்மன் ஓ.ராஜா.
தேனி நிலவரம் இப்படியிருக்க, மதுரை ஆவின் பொதுமேலாளர் ஆர்.ஜனனி சௌந்தர்யாவோ, ஒருபடி மேலே போய், அங்கு நிரப்ப வேண்டிய 62 பணியிடங்களுக்கும் வினாத்தாள் கொடுத்து, அனுபவமே இல்லாத இரணியன், பூங்கொடி, காவியா போன்ற அலுவலர்களை நேர்முக தேர்வு உறுப்பினர்களாக நியமித்து அவர்கள் மூலம் மதிப்பெண் போடவைத்து தேர்வானவர்களின் ‘லிஸ்டை’ சென்னைக்கு அனுப்பி பணி நியமனம் பெற தயாராகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளன. இவர்களின் வசூல் வேட்டைகள் அத்தனையும் சௌந்தர்யாவுக்கு கீழ் பணியாற்றும் மேனஜர்கள் கிருஷ்ணன், ராஜாங்கம், காயத்ரி ஆகியோரின் மூலம் கன கச்சிதமாக நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆவினில் இப்படி பொங்கி வழியும் அத்தனை ஊழல் குற்றச்சட்டுகளுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார் அதன் மேலாண்மை இயக்குனர் டாக்டர். ஆர்.நந்தகோபால் ஐ.ஏ.எஸ்…?