மதுரை கிழக்கு சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.வான மூர்த்தி மீது புகார்கள் வருவது புதிதல்ல என்றாலும், சொந்தக் கட்சியைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே அவரைப் பற்றி தலைமைக்கு எழுதியிருக்கும் புகார் கடிதம் மதுரை திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 7வது வார்டு கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் வாசிமலை. பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர், இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் தனது இல்ல விழா அழைப்பிதழை எடுத்துக் கொண்டு தனது உறவினர்களோடு கடந்த வாரம் 4ஆம் தேதி காலை 9 மணி அளவில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான மூர்த்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்து விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழை அன்போடும், பண்போடும், பாசத்தோடும் வழங்கியிருக்கிறார்.
அந்த பத்திரிக்கையில் பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்களின் படங்களை பார்த்தவாரு, ‘என்னிக்கி ஃபங்க்சன்..?’ எனக் கேட்ட மூர்த்தி, அதில் தனது படம் மூன்றாவதாக அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் படு ‘டென்சனாகி’ விட்டாராம். அத்தோடு, பத்திரிகையை கீழே வீசி எறிந்த எம்.எல்.ஏ.மூர்த்தி, வாசிமலையை வாய்க்கு வந்தபடி ஏகத்திற்கும் ஏசியதோடு, ‘வடக்கு, தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். அப்படி யாராவது கலந்து கொண்டால் நான் சும்மா விடமாட்டேன்” என மிரட்டி, அடிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது. தனது உறவினர்கள் மத்தியில் நடந்த இந்த அவமானத்தால் அங்கிருந்து கண்ணீர் துளிகளோடு வெளியேறிய வாசிமலை, நடந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதோடு, அவரை சென்னையில் நேரில் சந்தித்து புகாரும் அளித்திருக்கிறார்.
அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், மேலே கூறிய அந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு, “யாருடா மாவட்ட செயலாளர்? எல்லாமே நாந்தானடா, மணிமாறன் நான் வச்ச ஆளுடா (இவர், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார்), அவன் போட்டோவை ஏண்டா பெருசா போட்டீங்க? அவன் அப்பன் (சேடப்பட்டியார்) படத்தை ஏண்டா பெருசா போட்டீங்க? கண்ட, கண்ட நாய்ங்க படத்தைப் போட்டு எந்த தைரியத்துலடா என் கிட்டே பத்திரிக்கை கொடுக்க வந்தீங்க?” என தன்னை மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதோடு தலைவர்கள் படம் இடம் பெற்றிருக்கும் பத்திரிகையை வீசி எறிந்து அவமானப்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் மதுரை மாவட்ட உடன் பிறப்புகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், மதுரை ஊமச்சிகுளத்தில் வசிக்கும் பி.ஜே.பி. இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் ஒருவர் எம்.எல்.ஏ.மூர்த்தி பற்றி சமூக வளைத்தளங்களில் தகவல் வெளியிட்டமைக்காக அவரது வீட்டிற்கே சென்று மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.மூர்த்தி உட்பட 5 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், இதனை அடுத்து, ‘என் உயினும் மேலான உறவுகளே…’ என மூர்த்தி மறுப்பு அறிக்கை வெளியிட்டதும் நடந்தது.
தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்காக வாசிமலையிடம் பேசினோம். “ நடந்த சம்பவம் உண்மைதான். மூர்த்தியண்ணன் என்னை அடிக்கவும் கூட வந்து விட்டார். அங்கிருந்தவர்கள் தடுத்து என்னை வெளியில் அனுப்பி விட்டனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அறிவாலயத்தில் தளபதியை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுத்தேன். அவர், ஆர்.எஸ்.பாரதி அவர்களை சந்திக்க சொன்னதன் பேரில் அவரையும் சந்தித்து நடந்த விசயங்கள் குறித்து கூறினேன்” என்றார் வாசிமலை.
“இன்றைய தேர்தல் பிரச்சாரங்களில் ‘விவசாயம்’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படும் நேரத்தில், ‘களையெடுத்தால் மட்டுமே அறுவடை கிட்டும்’ என்ற வித்தை தெரியாதவரா தி.மு.க. தலைவர் ஸ்டாலின்…?” என கேள்வி கேட்கிறார்கள் மதுரை உடன்பிறப்புகள்.
பி.கு: இது தொடர்பாக எம்.எல்.ஏ. மூர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றும் அவரது விளக்கத்தை பெற முடியாததால், இந்த இணைய தளத்தில் உள்ள ‘மக்கள் நிருபர்’ என்ற பக்கத்தின் மூலமாக அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அதை வெளியிடவும் நாம் தயாராகவே உள்ளோம்.