– மல்லுக்கட்டும் மதுரை தி.மு.க.
ஏற்கனவே புகழ்பெற்ற மருத்துவர் என்பதோடு வாரி வழங்கும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ.வான டாக்டர். சரவணனுக்கு கட்சி பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மவுசு ஜாஸ்தி.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியிலேயே அவர் போட்டியிடக் கூடும் என கருதப்பட்ட நிலையில், ‘இம்முறை அவர் மதுரை வடக்குத் தொகுதியை குறி வைக்கிறார்’ என்ற தகவலால் திமுகவின் முக்கிய புள்ளிகள் சிலரே அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. காரனம் வடக்கு தொகுதியைப் பொறுத்த வரை அது வந்தாரை வாழ வைக்கும் பூமியாகவே பார்க்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து அலுவலகங்களும், மதுரையின் அடையாளமான உலக தமிழ்ச்சங்கம், காந்திமியூசியம், அரசு சட்டக் கல்லூரி, மாவட்ட நீதிமன்றம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் அடங்கியுள்ள இத்தொகுதியில் 2011-ம் ஆண்டு முதன்முறையாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். இவருக்கும், இந்தத் தொகுதிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. இவர் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். ஆனால், தொகுதி மாறி இங்கு வந்து போட்டியிட்டார். ஆனாலும், 46,400 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜேந்திரனை தோற்கடித்தார்.
அதன்பிறகு 2016ம் ஆண்டு இரண்டாது சட்டமன்ற தேர்தலை சந்தித்து இந்த தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் இந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத அதே திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா போட்டியிட்டு 18,839 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியை குறி வைத்து அதிரடி அரசியல் வியூகங்களை வகுத்து வருவதால் போட்டி மிகக் கடுமையானதாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில்தான், ‘தலைவரே, வடக்குலே ரெண்டு தடவையும் அதிமுகதான் ஜெயிச்சிருக்கு. இந்த தடவை எனக்கு அதை தந்தீங்கன்னா, அவங்களை ‘கிளீன் ஸ்வீப்’ பன்னிக் காட்டுறேன்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எம்.எல்.ஏ. சரவணன் வைத்த கோரிக்கை வெளியில் கசியவே, இதே தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வரும் திமுகவினர் சிலர், நேரடியாகவே டாக்டர்.சரவணனிடம் உரசலை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பின்னணியில் மதுரை திமுகவின் முக்கிய தளபதிகளும், ஒரு சில பாரம்பரிய கட்சியினரும் இருப்பதால் செய்வதறியாது தினறும் டாக்டர்.சரவணன் இவர்கள் குறித்த புகாரை விரைவில் தலைமைக் கழகம் வரை கொண்டு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
“நல்லது செஞ்சா குத்தமாயா…?” என அப்பாவியாக கேட்கிறாரகள் திமுக தொண்டர்கள்.