“பகவதி அம்மனுக்கு பன்னீரா..?  – கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்

“பகவதி அம்மனுக்கு பன்னீரா..? – கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில், குளச்சலுக்கு தெற்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் முன்னொரு காலத்தில் பனைக்காடாக இருந்த இடத்தில் சுயம்புவாக தோன்றிய பகவதியம்மனுக்கு இன்று தமிழகம் மற்றும் கேரளாவை தாண்டியும் பக்தர்கள் கூட்டம் அதிகம் உண்டு.

‘பெண்களின் சபரிமலை’ என வர்ணிக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் துப்புரவு பணிகளை சரிவர செய்யாததால் வளாகம் முழுவதும் அசுத்தம் அடைந்துள்ளதாகவும், பொதுமக்களால் இங்கு அர்ச்சனைக்கு கொண்டு வரப்படும் பூ, பழம் போன்றவற்றை கொண்டு அம்மனுக்கு அர்சனை செய்யாமல், அவற்றை கோயில் ஊழியர்களே கடைகளில் விற்று விடுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு ‘பன்னீர் அபிஷேகம்’ என்பது நடைமுறையில் இல்லாத நிலையில், பக்தர்களுக்கு பன்னீரை விற்பனை செய்துவிட்டு கோயிலுக்குள் கொண்டு வரப்படும் பன்னீர் மீண்டும் கடைகளுக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் மீண்டும் பக்தர்கள் வாங்கி கோயிலுக்கு கொண்டு செல்வதாகவும், இந்த மோசடியில் கோயில் ஊழியர்களே ஈடுபட்டு வருவதாகவும் பக்தர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்து கோவில்களின் கூட்டமைப்பினர்…

ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் இது பற்றி எதையும் கண்டுகொள்ளாததால் இன்று (04.01.2021) குமரி மாவட்ட இந்து கோவில்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஸ்ரீபதி, துணைத்தலைவர் வேல்தாஸ், ஒன்றிய தலைவர் வேலப்பன், துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், மாவட்ட பிரார்த்தனை குழு தலைவி சுதா, துணைத்தலைவர்கள் லட்சுமி தேவி, சித்ரா கிருஷ்ணகுமார், பிரேமலதா மற்றும் சேகர் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தட்டில் மனுக்களை வைத்து பக்தர்களுடன் கோயிலில் அளிக்க சென்றனர். ஆனால், கோயிலில் உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் அதை பெற்றுக்கொள்ள மறுக்கவே, வெறுத்துப்போன அவர்கள், கோயில் வாசலில் அமர்ந்து பஜனை பாடியபடி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து அமைப்பை சார்ந்தவர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவில் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், இந்து கோவில் கூட்டமைப்பை சேர்ந்தவர்களிடம் பேசினோம் நாம்.

 “மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பன்னீர் அபிசேகம் என்பது இது வரையில் நடைமுறையில் இல்லாத ஒன்று. இது தெரிந்தும், கோவில் ஊழியர்கள் – கடைக்கரர்கள் கூட்டணி போட்டு பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். தவிர, இங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றி பலமுறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் பூஜைப் பொருட்களை மறுவிற்பனை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் இந்த விசயத்தில் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படாத காரனத்தாலேயே பகவதி அம்மனிடமே முறையிட வந்தோம். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் உறுதி அளித்தபடி துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர் இந்து கோவில் கூட்டமைப்பினர்.

இந்த பன்னீர் மற்றும் மறுவிற்பனை எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு, தமிழகமெங்கும் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

YouTube
Instagram
WhatsaApp
error: This Content is reserved and protected by www.naradharvoice.com