‘ஊழல்களின் எதிரி, ஏழைகளின் தலைவன், நல்லாட்சி தரப்போகும் நாயகன்’ என போஸ்டர் புகழாரங்கள் ஒருபுறம் அலங்கரித்துக் கொண்டிருக்க, ‘இப்படி இருந்த நான் இப்போ எப்படியோ ஆயிட்டேன்..!’ என சொல்லாமல் சொல்லி வருகிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.
கடந்த சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு நடந்த போது பத்திரிகையாளர்களை உடன் அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து திருச்சிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கினார் நடிகர் கமல்ஹாசன். அதைக்கண்டு ‘அடடா, இத்தனை போக்குவரத்து வசதிகள் இருக்கும் போதும் ரயிலில் பயணப்பட்டு வருகிறார் என்றால் இவரும் நம்மவரே..!’ என புளகாங்கிதம் அடைந்த பொதுமக்கள் ரயில் நிலையத்தையே தினறடித்து விட்டனர். அப்போதே, ‘இது அத்தனையும் ஓட்டாக மாறுமா?’ என்பது சந்தேகமே என தெரிவித்திருந்தார் நடிகரும் அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர். ஆனால், அதை உண்மையாக்கி விடுவார் போலிருக்கிறது நடிகர் கமல்ஹாசன்.
அதாவது, சமீபத்தில் தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட போது அவர் பயன்படுத்திய காரைப் பார்த்து அசந்து போனார்கள் பொதுமக்கள். பார்த்தவுடன், தனது விலையை பறைசாட்டும் அந்த ‘லக்ஸரி’ லக்சஸ் கார் நமது மூளைக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தவே அவர் பயன்படுத்திய அந்த TN07CS 7779 என்ற பதிவெண் கொண்ட அந்த LEXUS LX 570 மாடல் குறித்து விசாரித்தோம் நாம்.
சென்னையில் அதன் ‘ஆன் ரோடு’ விலை சுமார் 2 கோடியே 79 லட்சத்து 38 ஆயிரத்து 246 ரூபாய் என தெரிய வரவே, ‘ஒருவேளை கட்சியினர் யாராவது கமல்ஹாசனின் பயன்பாட்டிற்காக கொடுத்திருக்கலாம்’ என்ற எண்ணத்தோடு போக்குவரத்து துறையில் அலசினோம். நமக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அதாவது, அந்தக் காரே நடிகர் கமல்ஹாசனின் பெயரில் பதிவாகியிருந்ததுதான் நமது அதிர்ச்சிக்கு காரனம்!
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் 6 கிலோ மீட்டர் மட்டுமே பயணிக்க முடியும் அந்த காருக்கான ஆர்.டி.ஓ. பதிவு செலவு மட்டும் 35 லட்சத்து 50 ஆயிரம் எனவும், வருடாந்திர இன்சூரன்ஸ் தொகை மட்டுமே கிட்டத்தட்ட 9.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கிறுகிறுப்பை விட்டு நாம் வெளியில் வருவதற்கு முன்பே சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்தில் வந்த அவர், அங்கிருந்து திருச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்.
பெங்களூருவை சேர்ந்த டெக்கான் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த வெலிகாப்டருக்கு 1 மணி நேர வாடகை சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் எனவும், குறைந்த பட்சம் 4 மணி நேரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அதை வாடகைக்கு எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு சேர்த்து லோக்கலில் அவர் பயணிக்க பயன்படுத்திய காரின் மதிப்பு சுமார் 80 லட்சம் இருக்கும் என்றும் திருச்சியை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு அந்த கார் சொந்தமாது எனவும் கூறப்படுகிறது.
பணக்காரர்களின் கட்சியாக மாறி வருகிறதா ம.நீ.ம…?