– அதிர்ச்சியில் அமைச்சர்கள்
பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகவிருக்கும் சசிகலாவிற்கு பெங்களூரு முதல் சென்னையின் எல்லை வரை சுமார் 65 இடங்களில் பிரமாண்ட வரவேற்புக்கு தயாராகி வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
2016-ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று 3 முறை கையால் ஓங்கி அடித்து சபதம் எடுத்து விட்டுதான் ஜெயிலுக்கு புறப்பட்டார் சசிகலா. அப்போது அவர் எதை மனதில் நினைத்து அந்த 3 சத்தியங்களையும் செய்தாரோ, அதை அவர் விரைவில் நிறைவேற்றுவார் என திடமாக நம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசு நிர்வாகத்தின் மையப்புள்ளியாக, மந்திராலோசனை கூடத்தின் தலைவியாக அவர் இருந்த போது, அவரின் கவனத்திற்கு செல்லாமல் எந்தவொரு முக்கிய ஃபைலிலும் அமைச்சர்கள் கையொப்பம் இடுவதில்லை. அதே நேரத்தில், அமைச்சர்களின் வருவாய் விசயத்தை கண்காணிப்பதற்காகவே சசிகலாவிற்கு நெருக்கமான சிலர் துறை வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த அமைச்சர்களை கண்காணித்தும் வந்தனர். இதனால், ‘படியளக்காமல்’ ஒருபிடி மண்ணைக் கூட அவர்கள் எடுத்துச் செல்வது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருந்ததாக கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணமும், அதனைத் தொடர்ந்து சசிகலாவிற்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையும் ‘இதுதாண்டா அரசியல்’ என்பதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியது. அவரால் அடையாளங்காட்டப்பட்ட பலர், அவரை நொடியில் தூக்கி எறிந்த சம்பவம் சசிகலாவையும் அவரின் உறவினர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சசிகலாவின் கணவரும் அரசியல் வித்தகருமான மா.நடராஜன் மறைந்த போது அவரது இறுதி அஞ்சலியில் கூட அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இறுதியில், ஒரு காலத்தில் ‘பவர் சென்டராக’ வலம் வந்த சசிகலா தனிமையில் அமர்ந்து சாதாரன தொண்டனுக்கும், மிச்சம் மீதி இருந்த ஒரு சில விசுவாசிகளுக்கும் கடிதம் எழுதத் துவங்கினார்.
ஆனால், சசிகலா விடுதலையாகும் நாள் நெருங்க நெருங்க பழையபடி அவரின் ஆதரவாளர்கள் கூட்டம் மீண்டும் வலுவடையத் துவங்கியுள்ளது. அதே நேரத்தில், தமிழக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாலும், சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாலும் சசிகலாவின் வருகை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் சென்னை திரும்பும் சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்வார் எனவும், அப்படி அங்கு செல்லும் சசிகலா மீண்டும் ஒருமுறை சத்தியம் பன்னவிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
ஆக, அடுத்த ‘இன்னிங்க்ஸ்’ நிதானமானதாகவும், பலமானதாகவும் இருக்கும் என கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.