அதிமுக பெண் எம்.பி.க்களிலேயே ரகளை கட்டி ரவுசு கூட்டியது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவாகத்தான் இருக்க முடியும். ஜெயலலிதாவையே எதிர்த்துப் பேசிய ஒரே பெண் என்பதால், அப்போதே டெல்லி பி.ஜே.பி. தலைமையை திரும்பிப் பார்க்க வைத்த அவர், ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, ‘தனக்கு பாதுகாப்பில்லை’ என்று கூறி பெரும்பாலும் டெல்லியிலேயே இருந்தார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பி.ஜே.பி.க்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பி.ஜே.பி.யில் இணைந்தார். அப்போது, அவருக்கு தமிழக பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என பேச்சு அடிபட்ட நிலையில், ‘தமிழகத்தின் ஜான்சி ராணியே, சிங்கப்பெண்ணே’ என ஏகத்துக்கும் புகழ்ந்து போஸ்டர் அடித்து வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் தனது கணவர் ராமசாமி, மகள் அஞ்சலி ஆகியோரோடு மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் அவர்கள் பயணித்த TN02BS6161 என்ற இன்னோவா கார் காரியாபட்டியை கடந்து செல்லும் போது திடீரென அந்த சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்த இருவர் கையிலிருந்த இரும்புக் கம்பியால் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. பிறகு, அவர்கள், பக்கவாட்டு கண்ணாடியை உடைக்க நெருங்கும் போது, சசிகலா புஷ்பா மற்றும் காரில் இருந்தவர்கள் கதறவே, வாகனத்தை நிறுத்தாமல் வேகமெடுத்திருக்கிறார் ஓட்டுனர். இதனால், அந்த மர்ம நபர்கள் காரை பின் தொடர முடியாமல் மாயமாய் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. பிறகு, காரில் சென்றபடியே காவல்துறை உதவி எண் 100க்கு டயல் செய்த சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகளோடு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றார்.
காவல்துறை விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் வந்ததாக தகவல் கிடைத்தையடுத்து சந்தேக நபர்கள் சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர் காரியாபட்டி காவல்துறையினர்.
இதற்கிடையே, ஏற்கனவே சிட்டிங் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வும், முன்னால் அமைச்சருமான சண்முகநாதனை அவரது பண்டாரவடை வீட்டில் சசிகலா புஷ்பா சந்தித்து பேசிய நிலையில், சமீபத்தில் விருதுநகர் மாவட்ட முக்கியப்புள்ளி ஒருவரையும் பி.ஜே.பி.க்குள் கொண்டு வர அவர் தூண்டில் போடுவதாக செய்தி கசிந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருப்பதால், ‘பேச்சிலேயே பட்டாசு கிளப்பும் வி.ஐ.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்கலாம்’ என சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் விருதுநகர் மாவட்ட பி.ஜே.பி.யினர்.
தற்போது, பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் சசிகலா புஷ்பா, 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.